Friday, May 11, 2018

அன்னா கரீனினா - பேரன்பின் பெருங்கருணை - 2


வெரான்ஸ்கியை சந்திக்கும் வரை, அலெக்ஸியுடனான அன்னாவின் வாழ்க்கை சாதாரணமான ஒன்றாகவே இருக்கிறது. வெரான்ஸ்கியுடன் காதலில் விழுந்தவுடன், பீட்டர்ஸ்பர்க் திரும்பி, தன்னை வரவேற்க காத்திருக்கும் கணவனை கண்டவுடன், ஏன், இவன் காதுகள் இப்படி அசிங்கமாக நீட்டிக்கொண்டிருக்கிறது? என்று நினைக்கிறாள். இப்போது அலெக்ஸியுடன் சம்பந்தப்பட்ட அனைத்தும் அன்னாவுக்கு ஒவ்வாமையை தருகிறது. அன்னா இப்படி ஒரு வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே அதன் மறுபக்கமான காதலை எந்த குற்றவுணர்ச்சியுமின்றி வெரான்ஸ்கியிடம் காட்டமுடியும். இந்த நுட்பத்தை எழுதமுடிந்ததாலயே அன்னா கரீனினா, டால்ஸ்டாயின் மகத்தான படைப்புகளில் ஒன்றாக இன்றுவரை கொண்டாடபடுகிறது. டால்ஸ்டாயால் 1878ம் ஆண்டு எழுதப்பட்டு வெளிவந்த அன்னா கரீனினா நாவல் பற்றி, 140 ஆண்டுகளாக பல விமர்சகர்கள் திரும்ப திரும்ப எழுதியும் அந்த நாவலின் நுட்பங்கள் தீர்வதாகயில்லை.



தன்னை பின் தொடரும் வெரான்ஸ்கியை முதலில் மறுக்கும் அன்னா மிக இயல்பாக அவனை ஏற்கிறாள். காதலில் திளைக்கிறார்கள் இருவரும். அன்னாவின் கணவன் அலெக்ஸி, எந்த முடிவும் எடுக்கமுடியாமல் மிகக்கொடுமையான வாழ்க்கையில் தவிக்கிறான். பார்ப்பவர்கள் எல்லாம் தன்னை எள்ளி நகையாடுவதாக தோன்றுகிறது அவனுக்கு. அன்னாவை வார்த்தைகளால் காயப்படுத்துகிறான். அவளை ஊருக்கு வெளியிலிருக்கும் பண்ணை வீட்டுக்கு அனுப்புகிறான்.  பிறகு வெரான்ஸ்கிக்கும் அன்னாவுக்கும் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பிறப்பில், அன்னா சாவின் எல்லையை தொடுகிறாள். தான் சாகபோகிறோம் என்கிற உணர்வு அழுத்த தன்னை வந்து பார்க்கும்படி தந்தி அனுப்புகிறாள் அலெக்ஸிக்கு. வாழ்வு முழுவதும் எந்த பெரிய சிக்கலும் இல்லாது ஒரு அரசு அதிகாரியாகவே வாழ்ந்த அலெக்ஸி, அன்னா குறித்த எந்த முடிவும் எடுக்கமுடியாமல் தவிக்கிறான். தந்தியை பார்த்தவுடன், அவள் இறந்துவிடுவதே இந்த சிக்கலுக்கான முடிவு என்று நினைத்து அவளை பார்க்க செல்கிறான்.

அலெக்ஸி, அன்னா, மற்றும் வெரான்ஸ்கி மூவரும் சந்தித்துக்கொள்ளும் இந்த இடம் நாவலின் உச்சத்தருணங்களில் ஒன்று. காய்ச்சல்வேகத்தில், “என்னுடைய அலெக்ஸி என்னை மன்னித்துவிடுவான், எனக்கு தெரியும் அவன் ஒரு புனிதன்” என்று அரற்றுகிறாள். இதைக்கேட்டு தன்னுடைய அனைத்து தடைகளும் உடைந்து கதறுகிறான், அலெக்ஸி. அன்னாவை மன்னித்துவிட்டேன் என்று சொல்லும்போது தனக்குள் நிகழும் அந்த பெருங்கருணையில் லயித்து நிற்கிறான், அலெக்ஸி.   கண்விழித்துப் பார்த்து, “வெரான்ஸ்கியை அழைத்து வா, அலெக்ஸி” என்று சொல்கிறாள், அன்னா. அறைக்கு வெளியே நிற்கும் வெரான்ஸ்கி முகத்தை இருகைகளாலும் மூடி, அழுதபடி அன்னா அருகில் வருகிறான். “பார்த்தாயா, என்னுடைய அலெக்ஸி என்னை மன்னித்துவிட்டான்”, என்கிறாள் அன்னா. அன்னாவை முழுவதும் தோற்றுவிட்டோம் என்று தெரிகிறது வெரான்ஸ்கிக்கு. அலெக்ஸியின் மனைவியை கள்ளத்தனமாக பார்க்கவந்தபோது வெரான்ஸ்கியால், அலெக்ஸியை நேருக்கு நேர் எதிர்க்கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது அலெக்ஸி தனது கருணையால் அன்னாவை வென்றெடுத்துவிட்டான். அவனிடம் பரிபூரணமாக தோற்றவனாக, வெளியே ஓடுகிறான். வீட்டுக்குச்சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயல்கிறான் வெரான்ஸ்கி.

பிறகு உடல்நிலை சரியானபின் வெரான்ஸ்கி தனக்காக சென்ற எல்லை அன்னாவை மீண்டும் வெரான்ஸ்கியிடம் இழுத்துச்செல்கிறது. கடைசியாக ஒரு முறை அன்னாவை பார்த்துவிடைபெற அலெக்ஸியிடம்அனுமதி கேட்கிறான் வெரான்ஸ்கி. அதை மறுப்பதன் மூலம், மீண்டும் அன்னாவின் மனதிலிருந்து விலகுகிறான் அலெக்ஸி. உண்மையில், வெரான்ஸ்கியின் தோழி பெட்ஸி அன்னாவிடம் வந்து, வெரான்ஸ்கி இறுதியாக ஒரு முறை பார்க்கவிரும்புகிறான் என்று கேட்கும்போது, அன்னாவே அதை மறுக்கிறாள். ஆனால், உள்ளூர அலெக்ஸியிடம் அந்த கருணையை எதிர்ப்பார்க்கிறாள். அலெக்ஸியின் வாயிலிருந்து அந்த மறுப்பு வரும்போது, வெரான்ஸ்கியின் தியாகம், அலெக்ஸியின் கருணையைவிடபெரிதாக தெரிகிறது அன்னாவுக்கு. இப்படி நுட்பமான தருணங்களின் மூலம் அன்னாவின் வாழ்வை, அவளது மன நிலையை வரைந்துச் செல்கிறார் டால்ஸ்டாய். மீண்டும் வெரான்ஸ்கியும், அன்னாவும் சேர்கிறார்கள். தனது மகனை விட்டு வெரான்ஸ்கியுடன் செல்கிறாள் அன்னா. 

வெரான்ஸ்கியால் கைவிடப்படும் கிட்டி, எல்லாவற்றையும் வெறுத்து பெற்றொர்களுடம் ஜெர்மனி செல்கிறாள். அங்கு சேவைசெய்யும் வெரான்காவை சந்தித்து அவளது கருணையால் ஈர்க்கபடுகிறாள். பிறகு ஒரு கட்டத்தில் வெரான்காவின் காதலன் அவனது தாயின் பேச்சைக்கேட்டு வெரான்காவை கைவிட்டுவிட்டான் என்பதை அறிகிறாள். “இப்படி காதலனால் கைவிடப்படுவது எவ்வளவு பெரிய அவமானம், இதை எப்படி தாண்டிவந்தாய்?” என்று கேட்கிறாள். “இதில் என்ன இருக்கிறது? வாழ்வில் காதலைவிடப் பெரிய விஷயங்கள் இருக்கின்றன கிட்டி” என்கிற வெரான்காவின் பதில் கிட்டியை கொஞ்சம் கொஞ்சமாக அமைதிப்படுத்துகிறது.





வெரான்ஸ்கி கைவிடும் கிட்டியை, லெவின் திருமணம் செய்துக்கொள்கிறான். லெவினை ஒரு கட்டத்தில் சந்திக்கும் அன்னா, லெவினை அந்த ஒரு சந்திப்பிலேயே முழுவதுமாய் ஈர்க்க நினைக்கிறாள். லெவின் போன பிறகு, லெவினுக்கும், வெரான்ஸ்கிக்கும் பொதுவான ஏதோ ஒரு அம்சம் இருப்பதாலயே கிட்டியால் இவர்கள் இருவரையும் காதலிக்க முடிந்திருக்கிறது என்று நினைத்துக்கொள்கிறாள். இவர்கள் இருவருக்கும் பொதுவான அம்சம் கிட்டிதான். கிட்டிதான், அன்னாவின் காதலை உள்ளுர தீர்மானிப்பவளாக இருக்கிறாள்.

No comments:

Post a Comment

Write your valuable comments here friends..